திண்டுக்கல்லில் தர்ப்பூசணி விற்பனை அமோகம்
திண்டுக்கல்லில் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல்:
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளையும், பழங்கள்- பழச்சாறு விற்பனை கடைகளையும் தேடிச்செல்வார்கள். இதன் காரணமாக கோடை காலத்தில் பழங்கள், குளிர்பானங்களின் விற்பனை அமோகமாக இருக்கும். அதிலும் தர்ப்பூசணி, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.
இதில் தர்ப்பூசணி பழங்கள் திண்டிவனம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. திண்டிவனத்தில் இருந்து கொண்டுவரப்படும் தர்ப்பூசணி பழங்கள் அதிக சுவை கொண்டதாக இருப்பதால் அவற்றுக்கு திண்டுக்கல்லில் நல்ல கிராக்கி உள்ளது.
வரத்து குறைவு
இதன் காரணமாக திண்டிவனத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்படும் தர்ப்பூசணி பழங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 வரை விலை கிடைக்கிறது. மற்ற ஊர்களில் இருந்து கொண்டுவரப்படும் தர்ப்பூசணி பழங்களுக்கு அவற்றின் தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.
தர்ப்பூசணி பழங்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையே சீசன் இருக்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்தில் இருந்தே சீசன் தொடங்கியுள்ளது. அதேநேரம் தர்ப்பூசணி பழங்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
வியாபாரிகள் கவலை
இதுகுறித்து ராஜக்காப்பட்டியை சேர்ந்த வியாபாரி சுப்பையாவிடம் கேட்ட போது, கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தர்ப்பூசணி பழங்கள் பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் விவசாயிகள் குறைந்த அளவில் தான் தர்ப்பூசணியை சாகுபடி செய்தனர்.
இதன் காரணமாக திண்டுக்கல்லுக்கு வாரத்துக்கு 50 டன் வரவேண்டிய தர்ப்பூசணி பழங்கள் தற்போது 25 டன் வரையே விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதையடுத்து தர்ப்பூசணி பழங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. சீசன் காலத்தில் ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகும். தற்போது தர்ப்பூசணி வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. 400 கிராம் எடை கொண்ட ஒரு பீஸ் தர்ப்பூசணி பழம் ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. விலை கூடுதலாக கிடைத்தாலும் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story