வக்கீல்கள் கடினமாக உழைத்தால் நீதிபதி ஆக வாய்ப்பு கொடைக்கானலில், ஐகோர்ட்டு நீதிபதி பார்த்திபன் பேச்சு
‘வக்கீல்கள் கடினமாக உழைத்தால் நீதிபதி ஆக வாய்ப்பு உள்ளது’ என்று கொடைக்கானல் கோர்ட்டு திறப்பு விழாவில், ஐகோர்ட்டு நீதிபதி பார்த்திபன் பேசினார்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில், கடந்த 1992-ம் ஆண்டு முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டில் வழக்குகள் அதிகம் குவிந்தன. இதனால் கூடுதலாக கோர்ட்டு அமைக்க வேண்டும் என வக்கீல்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானலில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நேற்று திறக்கப்பட்டது. புதிய கோர்ட்டை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பார்த்திபன் திறந்து வைத்தார். இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிர்மல்குமார், மஞ்சுளா, தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வக்கீல்களுக்கு வாய்ப்பு
இதைத்தொடர்ந்து கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் நடந்த திறப்பு விழாவில், புதிய கோர்ட்டு பெயர் பலகையை நீதிபதி பார்த்திபன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, கொடைக்கானல் கோர்ட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளை உடனடியாக விசாரிக்கும் வகையில் புதிய கோர்ட்டு திறக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் உண்மையை மறைத்து பேசக்கூடாது. வழக்குகளில் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடாது. வக்கீல்கள் கடினமாக உழைத்தால், விரைவில் மாவட்ட மற்றும் பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதி ஆகும் வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் நீதித்துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.
விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் பேசும்போது, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது. எந்த இழப்பையும் ஒரு மனிதன் தாங்கி கொள்வான். ஆனால் அநீதி இழைத்தால், அதை தாங்கிக்கொள்ளும் சக்தி அவனுக்கு கிடையாது. அநீதி கொடுமையானது. அதை அனுமதிக்க கூடாது. நீதியை பெற நீதிபதிகள், ஊழியர்கள், வக்கீல்கள் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
அமைச்சர் இ.பெரியசாமி
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘மலைகளின் இளவரசி’ என்று கொடைக்கானல் அழைக்கப்பட்டாலும் காஷ்மீர் மற்றும் ஊட்டியை விட இயற்கை செழிப்புடன் விளங்கி வருகிறது. இங்கு மரங்களை வெட்டுவதற்கு தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பசுமை பூத்தது போல் உள்ளது. சுகாதாரமும் நல்ல முறையில் பேணி காக்கப்படுகிறது. கொடைக்கானலில் விரைவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
அமைச்சர் அர.சக்கரபாணி
விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சார்பு நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்புகள், நீதிமன்ற கட்டிடங்கள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை கண்டறிந்து துறைகள் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பினால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி அனைத்து திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த நிதி பெற்றுதர நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இதேபோல் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிர்மல்குமார், மஞ்சுளா, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கொடைக்கானல் வக்கீல் சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா வரவேற்றார். கொடைக்கானல் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ்குமார், கார்த்திக், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் லாவண்யா, சந்திரன், கொடைக்கானல் நகரசபை தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன், ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டி, ஆர்.டி.ஓ. முருகேசன், வக்கீல் சங்க பொருளாளர் பாபு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story