முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்


முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்
x
தினத்தந்தி 13 March 2022 10:04 PM IST (Updated: 13 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கும்பல் கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன்படி திட்டக்குடி இளமங்கலத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட செந்தில்குமார் (வயது 47), வதிஷ்டபுரத்தை சேர்ந்த கவுதமி (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் விரைந்தனர்

இதற்கிடையில் இவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் கள்ள நோட்டுகளை வழங்கியது தெரிந்தது. இதையடுத்து ராமசாமியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதற்கு முன்பே குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம். இது தவிர முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.

அவர் பிடிபட்டால் தான், அவர் யாரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி உள்ளார். மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட்டாரா? என்பது போன்ற பல்வேறு விவரங்கள் தெரிய வரும் என்றார்.

Next Story