கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன தணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, கோபிநாத், போலீசார் ஜெகன், ஈஸ்வரன் ஆகியோர், பாகலூர்-ஓசூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரி டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் போச்சம்பள்ளி அருகே உள்ள சாதானூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மகேந்திரன் (வயது 22), தர்மபுரி மாவட்டம் திம்மாபுரம் அடுத்த தபோவனம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (56) என்பதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
அவர்கள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதுதொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரியுடன் 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story