இலக்கை தாண்டி வேளாண் உற்பத்தியை பெருக்க 3662 புதிய விவசாய மின் இணைப்புகள் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்


இலக்கை தாண்டி வேளாண் உற்பத்தியை பெருக்க 3662 புதிய விவசாய மின் இணைப்புகள் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
x
தினத்தந்தி 13 March 2022 10:17 PM IST (Updated: 13 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் இலக்கை தாண்டி வேளாண் உற்பத்தியை பெருக்க 3662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இலக்கை தாண்டி வேளாண் உற்பத்தியை பெருக்க 3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
விவசாய மின் இணைப்பு
தமிழ்நாடு அரசு எரிசக்தி துறையின் 2021-–2022-ம் ஆண்டு மானிய கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில்  ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
இந்த திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் விரைவாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தர்மபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்தில் விவசாய விண்ணப்பதாரர்களுக்கு பெயர், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலக்கை தாண்டி...
இந்த திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி வேளாண் உற்பத்தியை பெருக்க இதுவரை 3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுடைய அனைவருக்கும் மின் இணைப்புகள் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story