அரூர் அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி
அரூர் அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மற்றும் கண்காட்சி அரூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சக்திகுமார் வரவேற்றார். இந்த பயிற்சி முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள், இளைஞர்கள் தயார்செய்யும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொழில் மைய புள்ளியியல் ஆய்வாளர் பூங்கோதை சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும், சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் அரவிந்தகுமார் வங்கி வேலைவாய்ப்பு மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்கள். இந்த பயிற்சி முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வழிகாட்டும் கையேடு வெளியிடப்பட்டது. முகாமையொட்டி நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் கலைவாணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story