பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்-ஆசிரியையை கைது செய்ய கோரிக்கை


பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்-ஆசிரியையை கைது செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 13 March 2022 10:50 PM IST (Updated: 13 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 9-ம் வகுப்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பள்ளி ஆசிரியையை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.

எலச்சிப்பாளையம்:
மாணவி தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல்நகரை சேர்ந்தவர் சங்கர். தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி சந்தனமாரி. இந்த தம்பதிக்கு அர்ஜூன் என்ற மகனும், அர்ச்சனா (வயது 14) என்ற மகளும் இருந்தனர். அர்ச்சனா திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி அர்ச்சனா, மதியம் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஆசிரியைகள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். 
தலைவி பொறுப்பில் இருந்து நீக்கம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அர்ச்சனாவின் பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இரவு 8 மணிக்கு பள்ளி முன்பு சங்ககிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவியின் உறவினர்கள், அரசு பள்ளி தமிழ் ஆசிரியை அருள் செல்வி என்பவர் அர்ச்சனாவை செய்யாத தவறுக்கு கண்டித்ததாகவும், வகுப்பு தலைவி பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும், இதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு மாணவி எழுதிய கடிதத்தை ஆசிரியை கிழித்து விட்டதாகவும், இதனால் ஆசிரியையை கைது செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்தனர்.
உடலை வாங்க மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அதிரடிப்படையினருடன் அங்கு வந்தார். பின்னர் அவர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு, திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியை அருள் செல்வியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். திடீரென அவர்கள் ஆசிரியையை கைது செய்யக்கோரி திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
இதனால் பரமத்திவேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கொடுங்கள் என கூறினார். இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.
மேலும் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்து, 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதும், பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story