நாமக்கல் அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்-டிரைவர் உள்பட 3 பேர் கைது


நாமக்கல் அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்-டிரைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2022 10:50 PM IST (Updated: 13 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே உரிய அனுமதியின்றி வெடிபொருட்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:
வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). லாரி டிரைவர். காரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (38). இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு லாரியில் டெட்டனேட்டர் குச்சிகளை (வெடிபொருள்) உரிமம் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த லாரி நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி அண்ணாநகர் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டு சுவரின் மீது மோதியது. இதுகுறித்து வெங்கடேசன் மற்றொரு டிரைவரான வாழப்பாடி ஏரிப்புதூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (37) என்பவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் உடனடியாக ஒரு காரில் சம்பவ இடத்திற்கு வந்தார்.
3 பேர் கைது
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், டிரைவர்கள் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவில் இருந்து 9 ஆயிரத்து 302 சாதாரண டெட்டனேட்டர் குச்சிகளை கல்குவாரிகளுக்கு பயன்படுத்த, லாரியில் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் டெட்டனேட்டர் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேசன், செந்தில், ரத்தினம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரத்தினம் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி வீட்டு சுவரின் மீது மோதியதில் டெட்டனேட்டர் குச்சிகள் வெடித்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story