பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிவகுப்பு பேரணி; 1000 பேர் கைது
தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பேரணி நடந்தது. இந்த பேரணியை அனுமதி இல்லாமல் நடத்தியதாக 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை தென்காசியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டபோது போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் அனுமதியின்றி இந்தப் பேரணியை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1300 போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று மாலை தென்காசி சொர்ணபுரம் பள்ளிவாசல் அருகில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. பேரணியில் சுமார் 250 பேர் சீருடை அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பேரணியில் வந்தனர். இந்தப் பேரணி கொடிமர திடலுக்கு வந்த போது நெல்லை சரக
போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தலைமையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், பயிற்சி சூப்பிரண்டு கிரிஷ் யாதவ், துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் திப்புசுல்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் வரவேற்றார். மாநில செயலாளர் நாகூர்மீரான் தொடக்க உரையாற்றினார். தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா, மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் அஷ்ரப் ஆகியோர் பேசினார்கள்.
முடிவில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஹக்கீம் சேட் நன்றி கூறினார். மொத்தம் சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் உள்ள இசக்கி மஹால் மற்றும் கீழப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story