கல்லூரி மாணவி தற்கொலையில் கைதான 2 பேராசிரியர்கள் சிறையில் அடைப்பு
புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைதான 2 பேராசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புளியங்குடி:
புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைதான 2 பேராசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணியைச் ேசர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடியில் உள்ள மனோ கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற இந்து பிரியா செல்போன் கொண்டு வந்ததாக கூறி மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டு பேராசிரியர்கள் முத்துமணி, வளர்மதி ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால், இந்து பிரியா செல்போன் கொண்டு வரவில்லை என்று எடுத்துக்கூறியும், பேராசிரியர்கள் கேட்காமல் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த இந்து பிரியா நேற்று முன்தினம் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் போராட்டம்
இதுகுறித்து அறிந்த புளியங்குடி போலீசார், மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்து பிரியாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல் ஒப்படைப்பு
இதையடுத்து டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், பல்கலைக்கழகம், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இந்து பிரியா உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர்கள் முத்துமணி, வளர்மதி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முத்துமணியை தென்காசி சிறையிலும், வளர்மதியை நெல்லை கொக்கிரகுளம் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story