நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி இரவு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி 12-ந்தேதி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
இதையொட்டி காலை 8.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேர்த்தி சேவை
5-ம் நாளான திங்கட்கிழமை நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணிவரை மகாஜன மண்டபத்தில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.
16-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 17-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனி தேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார். 18-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள் ரெங்கநாச்சித்தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story