ஓய்வுபெற்ற என்ஜினீயர் தற்கொலை


ஓய்வுபெற்ற என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2022 2:16 AM IST (Updated: 14 March 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே கூடங்குளம் அணுமின் நிலைய ஓய்வுபெற்ற என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் எல்லக்குடி எல்.ஐ.சி. நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 74). இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகளை அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
மனைவி மற்றும் மற்றொரு மகளுடன் இங்கே வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் அருகே உள்ள கடைவீதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றிருந்தனர். அப்போது தனது அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் பழனிசாமி தூக்குப்போட்டு தொங்கியுள்ளார்.
உருக்கமான கடிதம் சிக்கியது
சிறிது நேரம் கழித்து அவரது மனைவியும், மகளும் வீடு திரும்பினர். அப்போது பழனிசாமி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கீழே இறக்கி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பழனிசாமி இறப்பதற்கு முன்பு தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், உடல் உபாதை காரணமாக தான் தற்கொலை செய்து கொள்கிறேன், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story