லாரிகளில் டீசல் திருடியவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


லாரிகளில் டீசல் திருடியவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 14 March 2022 2:36 AM IST (Updated: 14 March 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே, லாரிகளில் டீசல் திருடியவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்து உள்ளது

பெங்களூரு:
பெங்களூரு அருகே, லாரிகளில் டீசல் திருடியவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்து உள்ளது.

லாரிகளில் டீசல் திருட்டு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் மர்மநபர்கள் டீசல் திருடி இருந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில் ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்து டீசல் திருடும் மர்மநபர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது சரக்கு ஆட்டோவில் வரும் 2 நபர்கள் லாரிகளில் டீசல் திருடிவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் அடிப்படையில் 2 பேரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் லாரியில் 2 பேர் டீசல் திருடுவதாக ஜிகனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

அந்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று லாரிகளில் டீசல் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஜீப்பில் ஏற்ற முயன்றனர். அப்போது ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த ஆயுதத்தை எடுத்து 2 போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சுதர்சன் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார். 

ஆனால் அந்த நபர் சரண் அடைய மறுத்ததுடன் மீண்டும் போலீஸ்காரர்களை தாக்க முயன்றார். இதனால் அந்த நபரை இன்ஸ்பெக்டர் சுதர்சன் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது இடது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் கைதானவர்கள் பெயர்கள் ராஜூ என்கிற சீனிவாஸ், மல்லனகவுடா என்பது தெரியவந்தது. இவர்களில் ராஜூவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து இருந்தனர். ராஜூ தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story