ஏரியில் செத்துக்கிடந்த 17 கொக்குகள்


ஏரியில் செத்துக்கிடந்த 17 கொக்குகள்
x
தினத்தந்தி 14 March 2022 4:13 AM IST (Updated: 14 March 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் 17 கொக்குகள் செத்துக்கிடந்தன.

தாமரைக்குளம்:

தண்ணீரின் நிறம் மாறியது
அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடரமணபுரம் கிராமத்தில் அய்யனார் ஏரி, சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏரிக்கரையில் ஏராளமான கொக்குகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அரிசியில் விஷம் கலந்து அவை கொல்லப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் ஏரியில் தண்ணீரின் நிறமும் மாறி காணப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏரியின் தண்ணீரை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் ஏரியில் கால்நடைகள் தண்ணீர் குடுப்பதற்கும், விடுமுறை காலங்களில் மாணவர்கள் மீன்பிடித்து சாப்பிடுவதற்கும் வாய்ப்புண்டு. எனவே ஏரி தண்ணீரில் ஏதேனும் கலந்துள்ளதா? என்று கண்டறிய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் விசாரணை
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் குவனேஷ் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் பழனிவேல், வனவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த 17 கொக்குகளை கைப்பற்றினர். அவற்றை ஒட்டகோவில் உதவி கால்நடை மருத்துவர் உடற்கூறு பரிசோதனை செய்தார். உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே கொக்குகள் இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வன குற்றம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story