கலெக்டரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்த கல்லூரி மாணவிகள்


கலெக்டரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்த கல்லூரி மாணவிகள்
x
தினத்தந்தி 14 March 2022 5:52 PM IST (Updated: 14 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம், அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் திட்ட அறிக்கை சமர்ப்பித்தனர்.

தேனி: 

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவிகள் குழுவினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு செயல்திட்ட அறிக்கையை கொடுத்தனர். 

இதுகுறித்து அந்த மாணவிகளிடம் கேட்டபோது, ‘நாங்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஆண்டிப்பட்டி வட்டார பகுதியில் தங்கியிருந்து விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களிடம் இருந்து சாகுபடி தொழில்நுட்பங்களையும் கற்றோம். அப்போது விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை தெரிந்து கொண்டோம். கடுமையான வறட்சியிலும், விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைபொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் தக்காளி போன்ற பயிர்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளனர். இதனால் விளைபொருட்கள் வீணாகின்றன. விலை கிடைக்காத போது விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவது குறித்தோ, அவற்றை இருப்பு வைத்து பின்னர் விற்பனை செய்வது குறித்தோ போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. எனவே விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விளை பொருட்கள் வீணாகாமல் அவற்றை பாதுகாத்து இருப்பு வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது குறித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்று நாங்கள் நேரடியாக பார்த்த விவரங்களை திட்ட அறிக்கையாக கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்றனர்.


Next Story