தேனி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்


தேனி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 6:01 PM IST (Updated: 14 March 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கான பங்களிப்பு தொகையை ரத்து செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட முயன்றனர்.

தேனி: 


குடியேற முயற்சி
தேனி அல்லிநகரம் வள்ளி நகரைச் சேர்ந்த மக்கள், வனவேங்கைகள் கட்சி பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் அடுப்பு, தலையணை, பாத்திரம், குடங்கள் ஆகியவற்றை கொண்டு வந்தனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கான பங்களிப்பு தொகையை ரத்து செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

போராட்டம்
இதையடுத்து நுழைவு வாயிலில் நின்று கொண்டு அந்த மக்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். மனு கொடுக்க சென்றவர்கள் திரும்பி வரும் வரை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த மரங்களின் நிழலில் அமர்ந்திருந்தனர். இந்த போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "எங்களுக்கு வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த கூறுகின்றனர். எனவே, இந்த பங்களிப்பு தொகையை ரத்து செய்து ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடுகளை வழங்க வேண்டும்" என்றனர்.


Next Story