மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லா உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடு களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் இந்துக்களுக்கு விபூதி பிரசாதமும், முஸ்லிம்களுக்கு சர்க்கரையும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து விழாவை நடத்தினர்.
சந்தனக்கூடு
விழாவிற்கு கரிசல்பட்டி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது முகமது, ஊராட்சி தலைவர் ஷாஜகான், நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினார்.
விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு நகர் வலம் வந்தது. முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லா தர்காவிற்கு சந்தனக்கூடு வந்து சேர்ந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்பட்டு இருந்த சந்தனக்குடத்தில் இருந்து சந்தனம் எடுத்து பாத்தியா ஓதப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவில் கலந்துகொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story