தத்ரூபமாக செய்யப்பட்ட சிலையின் மடியில் வைத்து நடந்த காதணி விழா


தத்ரூபமாக செய்யப்பட்ட சிலையின் மடியில் வைத்து நடந்த காதணி விழா
x
தினத்தந்தி 14 March 2022 8:26 PM IST (Updated: 14 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

இறந்த தாய்மாமனின் விருப்பத்தை நிறைவேற்ற தத்ரூபமாக செய்யப்பட்ட சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடந்தது

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் வினோபா நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி, பசுங்கிளி தம்பதியரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 21 வயதில் விபத்தில் இறந்து போனார். இவருடைய அக்காள் பிரியதர்ஷினிக்கு தாரிகாஸ்ரீ(வயது7) என்ற மகளும், மோனேஷ் குமரன்(5) என்ற மகனும் உள்ளனர். இந்த குழந்தைகள் மீது பாண்டித்துரை அதிக பாசம் வைத்திருந்தார்.

இந்தநிலையில் 2 குழந்தைகளின் காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பாண்டித்துரையின் முழுஉருவச்சிலை சிலிக்கானால் செய்யப்பட்டு அதற்கு பட்டு வேட்டி, சட்டை அணிவிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டு இருந்தது. -

பின்னர் அந்த சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. முன்னதாக பாண்டித்துரையின் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. 
இதுபற்றி பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறுகையில், அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்று பாண்டித்துரை அடிக்கடி கூறுவான். இந்நிலையில் அவன் விபத்தில் இறந்து போனான். 

இதனால் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் பெங்களூருவில் அவனது அச்சு அசல் உருவம் போலவே சிலிக்கானால் தத்ரூபமாக சிலை செய்து இங்கு கொண்டு வந்தோம். இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது. அதுபோல பேரக்குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் உட்கார்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது. என் மகளின் ஆசையும் நிறைவேறியது என்றார். 
ஒட்டன்சத்திரத்தில் நடந்த இந்த வினோத நிகழ்ச்சி பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. 

Next Story