கர்நாடகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்


கர்நாடகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
x
தினத்தந்தி 14 March 2022 9:43 PM IST (Updated: 14 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சார்-பதிவாளர் அலுவலகங்கள்

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்திற்கு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் மஞ்சுநாத், சார்-பதிவாளர் அலுவலகங்கள் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-

  பெங்களூரு அருகே உள்ள பிடதி, குதூரில் சாா்-பதிவாளர் அலுவலகங்கள் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசிக்கப்படும். அங்கு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த சார்-பதிவாளர் அலுவலகங்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதனால் அனைத்து வசதிகளுடன் கூடிய சார்-பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படும்.

மென்பொருள் மேம்பாடு

  மேலும் சில சார்-பதிவாளர் அலுவலகங்களில் நிலங்களை பதிவு செய்ய ஒரு வாரத்திற்கு மேல் ஆவதாக உறுப்பினர்கள் கூறினர். ஏற்கனவே இருந்த மென்பொருளை தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த மென்பொருளை மேம்படுத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் நில பதிவு விவகாரங்களை வேகமாக மேற்கொள்ள முடியும்.

  கர்நாடகத்தில் சாதி-வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசின் பல்வேறு சேவைகளை வழங்கும் ‘நாட கசேரி’ அலுவலகங்களின் எண்ணிக்கை 761 ஆகும். இதில் 318 அலுவலகங்கள் அரசின் கட்டிடத்திலும், 303 அலுவலகங்கள் அரசு பிற துறைகளின் கட்டிடத்திலும், 148 அலுவலகங்கள் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகின்றன. ஒரு அலுவலக கட்டிடம் கட்ட ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கட்டிட வரைபடம்

  இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த அலுவலகங்களை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக விசாலமாக கட்டப்படும். இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசித்து கட்டிட வரைபடம் தயாரிக்கப்படும்.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story