ஆசிரியர் பெற்றோர் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க முடியும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு


ஆசிரியர் பெற்றோர் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க முடியும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 14 March 2022 9:47 PM IST (Updated: 14 March 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர், பெற்றோர் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க முடியும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேசினார்.

ஊட்டி

ஆசிரியர், பெற்றோர் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க முடியும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேசினார்.

சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு உள்ளது. இதில் ஆசிரியர், பெற்றோர், உள்ளாட்சி பிரநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்து திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 419 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தலா 5 பேருக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி ஊட்டி வட்டாரத்தில் உள்ள 134 அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவினருக்கு சிறப்பு பயிற்சி 11 குறுவள மையங்களில்  நடைபெற்றது. ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைநிற்றலை தடுக்க முடியும்

பள்ளி கல்வி தரத்தில் பள்ளி மேலாண்மை குழு பங்கு மிக முக்கியமானது. பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த குழுவால் மட்டுமே மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து நிறுத்த முடியும். இதற்காக பள்ளி மேலாண்மை குழுவினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து பள்ளி முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும். அத்துடன் இந்த குழுவில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

தரமான கல்வி

தொடர்ந்து கருத்தாளர் வேல்முருகன் பேசும்போது, அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வு தளம் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு கழிப்பிடம், குடிநீர் போன்ற வசதிகள் சரியாக உள்ளதா என்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றார். 

இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஷீலா, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

Next Story