பிளாஸ்டிக் குழாய்களில் தீப்பிடித்தது
ஆண்டிப்பட்டி அருகே பிளாஸ்டிக் குழாய்களில் தீப்பிடித்தது
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ.167 கோடியில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக பிளாஸ்டிக் குழாய்கள் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிளாஸ்டிக் குழாய்களில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அச்சமடைந்து ஓடினர். பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் தீ விபத்து ஏற்படும் அபாய நிலை உருவானது. அங்கு வேலை செய்த பணியாளர்களும் தப்பித்து ஓடினர். தீ மற்ற இடங்களுக்கு பரவாத வகையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், கடமலைக்குண்டு மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பிளாஸ்டிக் குழாய்கள், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த ஜெனரேட்டர் உள்பட ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story