வனத்துறை சோதனை சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும்
வனத்துறை சோதனை சாவடியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி கலெக்டரிடம் 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி:
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க முல்லைப்பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜசேகர் தலைமையில், பொதுச்செயலாளர் பொன்காட்சிக்கண்ணன், முதன்மை செயலாளர் சலேத்து, ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சோதனை சாவடி இடமாற்றம்
முல்லைப்பெரியாறு அணைக்குள் எவ்வித முன்னறிவிப்புமின்றி, கேரள மாநில அதிகாரிகளும், பொறியாளர்களும், உளவுத்துறை அதிகாரிகளும் நினைத்த நேரத்தில் வந்து செல்கின்றனர். அணைக்குள் வருபவர்கள் குறித்தான வருகை பதிவேட்டை முறையாக கையாளவில்லை. இதனால், அணைக்குள் வருபவர்கள் யார் என்பது குறித்த அச்சம் நீடிக்கிறது. எனவே உடனடியாக முல்லைப்பெரியாறு அணைப் பகுதியை தேனி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையை சாலை மார்க்கமாக இணைக்கும் வல்லக்கடவு பாதையை, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்படுத்துவதில் தொடர்ந்து தடை நீடிக்கிறது. இந்நிலையில் தேக்கடியில் அமைந்திருக்கும் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் குடியிருப்புக்கு, சில மராமத்து வேலைகளுக்காக பொருட்களை ஏற்றிச்சென்ற வண்டியை, தேக்கடியில் அமைந்திருக்கும் பெரியாறு புலிகள் காப்பக சோதனைச்சாவடியில் கேரள வனத்துறை தடுத்து நிறுத்தியது.
3 நாட்களாகியும் வண்டியை தமிழக குடியிருப்பு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. எனவே பெரியாறு புலிகள் காப்பகம் அமைத்திருக்கும் வனச்சோதனை சாவடியை, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் குடியிருப்புக்கு அடுத்து அமைக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாதிச் சான்றிதழ்
சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "சீர்மரபினர் சமுதாயங்களுக்கு சீர்மரபு பழங்குடிகள் என்று சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், தற்போது டி.என்.டி. (சீர்மரபு பழங்குடியினர்), டி.என்.சி. (சீர்மரபினர் சமுதாயம்) என்று இரு பிரிவாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. 1979-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல், டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story