9 ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதாக புகார் அரசு பள்ளிக்கூடத்தை உறவினர்கள் முற்றுகை


9 ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதாக புகார் அரசு பள்ளிக்கூடத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 March 2022 10:16 PM IST (Updated: 14 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மாணவனை ஆசிரியை தாக்கியதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு பள்ளிக்கூடத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விருத்தாசலம்

மாணவன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 
இந்த நிலையில் நேற்று அந்த மாணவனை, ஆங்கில ஆசிரியை வீட்டுப்பாடம் சரியாக எழுதி வரவில்லை எனக் கூறி தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மாணவன் நடக்க முடியாமல் சிரமப்பட்டான்.

முற்றுகை

இதுபற்றி அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கடலூர்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து ஆசிரிைய தாக்கியதில் காயம் அடைந்த மாணவன், விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story