காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 20 பேர் காயம்
கீழ்விலாச்சூர், வஞ்சூரில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
கே.வி.குப்பம்
கீழ்விலாச்சூர், வஞ்சூரில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
கீழ்விலாச்சூர்
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்விலாச்சூரில் மாடுவிடும் விழா நடைபெற்றது. இதில் 215 மாடுகள் பங்கேற்றன. முதல் பரிசு ரூ.77 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.55 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.44 ஆயிரம் உள்பட 57 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் மாடுகள் முட்டியதில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன், கே.வி.குப்பம் தாசில்தார் சரண்யா, மண்டல துணை தாசில்தார் பலராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், அருண்காந்தி உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விழா ஏற்பாடுகளை கீழ்விலாச்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
வஞ்சூர்
காட்பாடியை அடுத்த வஞ்சூரில் மாடுவிடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாடுகள் ஓடும் வீதியின் இருபுறமும் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஓடுபாதையில் மண்கொட்டி நிரப்பப்பட்டு காளைகள் ஓடுவதற்கு தயார் செய்யப்பட்டிருந்தது. கால்நடை மருத்துவர்கள் விழாவுக்கு அழைத்து வரப்பட்ட அனைத்து காளைகளையும் பரிசோதனை செய்தனர். அதன்பின்னரே அந்த காளைகள் விழாவில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
விழாவை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அவை இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. வீதியின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பொதுமக்கள் கைகளை தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். போட்டியில் முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.1 லட்சம் உள்பட 10-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் மோதியதில் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவையொட்டி 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story