மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 14 March 2022 10:27 PM IST (Updated: 14 March 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர்  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 544 மதிப்பில் 3 சக்கர நாற்காலிகள், காதொலி கருவி, சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சென்னையில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story