தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட படிகநாளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து படிகநாளம், முதுகேரிதொட்டி, போராளி, பிர்ஜேப்பள்ளி, திம்மன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த கிராமங்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து சம்பபந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இந்தநிலையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி நேற்று பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல் ரவிக்குமார் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story