நந்தகோபாலசாமி கோவில் கும்பாபிஷேக விழா


நந்தகோபாலசாமி கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 14 March 2022 11:09 PM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே கே.புதுப்பாளையம் பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர்:-
மோகனூர் அருகே கே.புதுப்பாளையம் பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நந்தகோபாலசாமி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கே.புதுப்பாளையத்தில் பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மத்திய இணை மந்திரி எல்.முருகனின் குலதெய்வ கோவிலாகும்.
இந்த கோவிலில் புதியதாக சிற்ப வேலைகள் செய்யப்பட்டு விமானத்துடன் கூடிய புதிய ஆலயம் கட்டப்பட்டது.  பரிவார மூர்த்திகளான துவாரபாலகர், கருடன், ஆஞ்சநேயர், நல்லேந்திரன் சுவாமி, வீரமாத்தியம்மன், கன்னிமார் சாமிகளுக்கு சிலைகள் அமைக்கப்பட்டும், மதுரைவீரன் சாமிக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
விழா தொடங்கியது
கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மகா சங்கமம், கணபதி, நவக்கிரகம் மற்றும் மகாலட்சுமி ேஹாமம் நடந்தது.
மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, யாக சாலை, பிரவேசம், முதற்கால ேஹாமம், சாமி பிரதிஷ்டை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மறுநாள் (13-ந் தேதி) காலை 8 மணிக்கு விமான கலசங்கள் பூஜை, 2-ம் கால ஹோமங்கள், மாலை 6 மணிக்கு 3-ம் கால ஹோமங்கள், பிம்பசுத்தி பூஜைகள் நடந்தன.
கும்பாபிஷேகம்
நேற்று காலை 6 மணிக்கு நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனையும், காலை 7 மணிக்கு கடங்கள் புறப்பாடும் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம், பாமா ருக்மணி சமேத நந்தகோபாலசாமி சன்னதி விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீபுரம் பொற்கோவில் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.
முக்கிய பிரமுகர்கள் தரிசனம்
விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன் (நெல்லை), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), சரஸ்வதி (மொடக்குறிச்சி), சேகர் (பரமத்திவேலூர்), முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், பா.ஜனதா பிரசாரக்குழு நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் குமார், வக்கீல் மாதம்மாள் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழிசை சவுந்தரராஜன்
பின்னர் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகின் பல்வேறு நாடுகளில் மனநல ஆஸ்பத்திரிகள் அதிகரித்து வரும் நிலையில் நமது நாட்டில் ஆன்மிகத்தை வளர்க்கும் கோவில்கள் அதிகம் உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. கோவிலுக்கு சென்று வழிபடும் போது மன அழுத்தம் குறைந்து மனம் பக்குவப்படுகிறது. 
பிரதமர் நரேந்திர ேமாடி நடவடிக்கையால் இந்தியா முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். கொரோனா தடுப்பூசியை நாமே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
ரஷியா- உக்ரைன் போரின் போது இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கவர்னரை இயக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குதான் உள்ளது. அனைத்து மாநில கவர்னர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story