இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை 15-வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு கலெக்டர் ஸ்ரேயாசிங்கை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில். எங்களுக்கு வீடோ, சொந்தமாக நிலமோ இல்லை. எனவே வாடகை வீட்டில் குடியிருந்து வரும் நாங்கள் வாடகை கொடுக்க முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டுமனையும், அதற்குரிய பட்டாவும் வழங்கி வாழ்வாதார இருப்பிடத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்கள் போராட்டம்
இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா எஸ்.கொந்தளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சுமார் 40 சென்டை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என்று கூறினர். உடனே போலீசார் அவர்களை சமரசம் செய்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story