நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு குளித்தலை நகராட்சியில் முதல் முைறயாக ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு குளித்தலை நகராட்சியில் முதல் முைறயாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
குளித்தலை,
ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்ற பின்னர் குளித்தலை நகராட்சியில் முதல் முறையாக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன், நகராட்சி ஆணையர் சுப்புராம், பொறியாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய போது எழுந்து பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு குளித்தலை சட்டமன்ற உறுப்பினரை முறையாக ஏன் அழைக்கவில்லை என்று நகராட்சி ஆணையரிடம் கேட்டனர்.
மேலும், இனி வரும் முக்கிய நிகழ்வுகளில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினருக்கு முறையான அழைப்பு விடுத்து அவரை வரச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தார்.
நகராட்சி தலைவியிடம் மனு
தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகராட்சித்தலைவர் சகுந்தலா பல்லவிராஜாவிடம் மனு அளித்தனர். இதேபோல் குளித்தலை நகராட்சி 6-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இந்திரா வெற்றிவேலும் தனது வார்டு பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து நகர்மன்ற தலைவரிடம் மனு அளித்தார்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
இதையடுத்து நகர்மன்றத்தலைவர் பேசுகையில், குளித்தலை நகராட்சி மாதிரி நகராட்சியாக அறிவித்து இந்த நகராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை இந்த நகராட்சிக்கு அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இத்திட்டத்தை பெற்றுத்தந்த அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பஸ் நிலையம் விரிவுப்படுத்தப்படும்
மேலும் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குளித்தலை நகராட்சியில் வெகுவிரைவில் புதிய புறநகர் பஸ் நிலையம் மக்கள் விரும்புகின்ற இடத்தில் அமைக்கப்படும். மேலும் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நகராட்சியின் அதிகாரிகள் ஒத்துழைப்போடு பணிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story