சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம், பூவானம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கணக்கன்காட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாய் வீட்டிற்கு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது 15 வயது மகளை அனுப்பியுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமியின் உறவினரும், தொழிலாளியுமான முருகேசன் (வயது 36) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.
அவர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தீர்ப்பு
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி டாக்டர் சத்யா இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பையொட்டி முருகேசன் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி முருகேசனிடம், உன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உண்மை என தெரிகிறது. எனவே, தாங்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உமது தரப்பு கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறினார். அதற்கு முருகேசன், எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
சாகும் வரை சிறை தண்டனை
அதன்பிறகு நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின் முருகேசன் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு போலீஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
இதற்கு முன்பு இதே மகிளா கோர்ட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற வெவ்வேறு வழக்குகளில் 4 முறை சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story