இரண்டாம் நிலை காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி தொடங்கியது
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு 8 மாத கால அடிப்படை பயிற்சி தொடங்கியது.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சேர உள்ளனர். இதையொட்டி இவர்களுக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி மற்றும் ஒரு மாதம் செய்முறை பயிற்சி ஆகிய 8 மாத பயிற்சி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இப்பணிக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 200 ஆண்களுக்கான அடிப்படை பயிற்சி நேற்று முன்தினம் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தொடங்கியது. இப்பயிற்சியை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தொடங்கி வைத்தார்.
அதிகாரிகள் அறிவுரை
இதனை தொடர்ந்து நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டு பயிற்சி காவலர்களுக்கு நெறிமுறைகள் குறித்து உரிய விளக்கமளித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.
இங்கு பயிற்சி பெறும் காவலர்களுக்கு 7 மாத காலம் அடிப்படை பயிற்சியான லத்தியை பயன்படுத்தும் முறை, துப்பாக்கி சுடும் பயிற்சி, கவாத்து பயிற்சி, உடற்பயிற்சி, சட்டம் பற்றிய பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். அப்பயிற்சிகள் முடிந்ததும் 15 நாட்கள் பட்டாலியன் நடைமுறைகள் குறித்தும், அடுத்த 15 நாட்கள் போலீஸ் நிலையத்தில் காவலர்களின் பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இந்த 8 மாத கால பயிற்சி நிறைவடைந்ததும் அவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான பணியில் சேர பணி நியமன ஆணை வழங்கப்படும்.
Related Tags :
Next Story