பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிர்களை நடவு செய்ய முன்வர வேண்டும்;அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு


பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிர்களை  நடவு செய்ய முன்வர வேண்டும்;அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
x
தினத்தந்தி 15 March 2022 12:46 AM IST (Updated: 15 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாய பயிர்களை நடவு செய்ய முன் வர வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்,
குமரி மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாய பயிர்களை நடவு செய்ய முன் வர வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கருத்தரங்கம்
குமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பாராம்பரிய ரக பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதோடு, சுத்தமான பசும்பால் கிடைப்பது அரிதாகிவிட்டது. நாம் இப்போது உட்கொள்ளும் காய்கறிகள், பழவகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் ரசயானம் மற்றும் நச்சுப்பொருள் நிறைந்து சுகாதாரத்தன்மை இல்லாத பொருட்கள் உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலை மாற அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய நிலங்களில் பாரம்பரியமிக்க இயற்கை பயிர்களை நடவு செய்ய முன்வருவதோடு, இயற்கை உணவு பழக்க வழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு காலத்தில் பலவேறு தரப்பட்ட மரங்கள், மருத்துவ மூலிகைகள், பழவகைகள், காய்கறிகள் இருந்த சூழ்நிலையில் தற்போது அவை படிப்படியாக குறைந்து வருகிறது.
பயன்படுத்த வேண்டும் 
நமது மாவட்டம் மண் வளமானது மிகவும் சிறப்பானது. மண் வளத்தினை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகள் நட்டு மறைந்து போன நமது இயற்கை வளங்களை மீட்டெடுக்க வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற 6 விவசாயிகளுக்கும், ஆறுதல் பரிசாக 4 விவசாயிகளுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் மண்டல இணை இயக்குனர் (வேளாண்மை) சத்தியஜோஸ், இணை இயக்குனர் (கால்நடைத்துறை) சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான், வக்கீல் சக்திவேல், செந்தில்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story