கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 March 2022 1:31 AM IST (Updated: 15 March 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

விருதுநகர், 
அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். 
முற்றுகை 
வெம்பக்கோட்டை யூனியன் நதிகுடி கிராம பஞ்சாயத்தில் உள்ள சுப்பிரமணியம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதோடு கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. 
குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை அதிகம் உள்ளது. தெருவிளக்கு அதிக இடங்களில் எரிவதில்லை. அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. மேலும் எங்களது கிராம இளைஞர்கள் விளையாட வசதியாக விளையாட்டு திடலும் கிடையாது. 
நடவடிக்கை 
இதுபோன்ற பல அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த 2ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து செயலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
ஆனால் எங்கள் கிராமத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவிக்கும் நிலை உள்ளது. ஆனால் எங்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறும் கிராமத்தில் அதிக அளவில் பராமரிப்பு பணிகள் செய்ததாக தவறான தகவல் தரும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story