தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி நம்பர் 7 கோவிந்தநாட்டுச்சேரி புத்தூரில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-கோவிந்தராஜ், கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் ஆஸ்பத்திரி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பகுதி ஏர்வாடி கிராமம் அய்யனார் கோவில் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் மேற்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மின்கம்பத்தின் உச்சியில் மின்கம்பிகளை தாங்கி பிடித்துள்ள கம்பி முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை
Related Tags :
Next Story