பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி


பண்ணாரி அம்மன் கோவிலில்   பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 14 March 2022 8:11 PM GMT (Updated: 14 March 2022 8:11 PM GMT)

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
22-ந் தேதி குண்டம் விழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மனின் சப்பர வீதி உலா பண்ணாரியை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. 
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் தான் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். மேலும் ஏராளமான கால்நடைகளும் குண்டம் இறங்கும். இதற்காக தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். இதற்காக பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே இங்கு வந்து தங்கி இருந்து இடம் பிடித்து குண்டம் இறங்குவார்கள். 
தடுப்புகள் அமைக்கும் பணி
எனவே வரிசையில் நின்று பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையாக இடம் பிடித்து தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்ட பகுதியிலேயே தங்கி இருப்பார்கள். தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. 
எனவே பக்தர்கள் வெயிலில் உட்கார்ந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் தகரத்திலான மேற்கூரையும் அமைக்கப்பட்டு உள்ளது. 
சப்பரம் வீதி உலா
இந்தநிலையில் பண்ணாரி அம்மன் சப்பரம் நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலம் நகர் பகுதியில் உலா சென்றது. பின்னர் இரவில் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் பண்ணாரி அம்மனின் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. 
பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் 2-வது நாளாக அம்மனின் சப்பர வீதி உலா வேணுகோபால சாமி கோவிலில் இருந்து தொடங்கியது. கோவிலில் இருந்து  பண்ணாரி அம்மன் சப்பரம் புறப்பட்டு நேராக கோணமூலை, ரங்கசமுத்திரம் பகுதிக்கு சென்றது. அங்கு பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி வீதியாக சென்றது. 
அப்போது வீதி முழுவதும் பெண் பக்தர்கள் ரோட்டில் தண்ணீர் தெளித்தும், மாக்கோலம் போட்டும் அம்மனை வரவேற்றனர். மேலும் தேங்காய், பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் பவானிசாகர் மெயின் ரோடு, எக்ஸ்டென்சன் வீதி, கோபால்டு லைன் வழியாக அங்குள்ள மாரியம்மன் கோவிலை மதியம் சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து இரவில் அம்மனின் சப்பரம் கோட்டுவீராம்பாளையம் சவுடாம்பிகை கோவிலில் தங்க வைக்கப்பட்டது. 
இன்று (செவ்வாய்க்கிழமை) பட்டவர்த்தி அய்யம்பாளையம் பகுதியில் அம்மனின் சப்பர வீதி உலா நடைபெறுகிறது. 

Next Story