மண்டியாவில் பரபரப்பு; வைரமுடி கவசம் கொண்டு வந்த வாகனம் சிறைபிடிப்பு - முதல் மரியாதை குடும்பத்தினர் போராட்டம்
மண்டியாவில் வைர முடி கவசம் கொண்டு வந்த வாகனத்தை சிறைபிடித்து முதல் மரியாதை குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வைர முடியை எடுத்து வரும் விஷயத்தில் தங்களை அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டினர்.
மண்டியா:
வைரமுடி உற்சவம்
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் பிரசித்தி பெற்ற மேல்கோட்டை செலுவநாராயண சாமி கோவிலில் நேற்று வைர முடி உற்சவம் தொடங்கியது. வைர முடி உற்சவத்தை முன்னிட்டு செலுவநாராணசாமிக்கு தங்கம், வைரம் பதித்த கவசத்தை அணிவிப்பது வழக்கம்.
இந்த கவசம் ஆண்டுதோறும் சுவாமிக்கு அணிவித்து தேர் திருவிழா நடைபெறும். உற்சவம் முடிந்ததும் மண்டியாவில் உள்ள மாவட்ட கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
தர்ணா போராட்டம்
ஆணடுதோறும் மாவட்ட கருவூலத்தில் இருந்து அந்த கவசம் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படும். இந்த நிகழ்வு இக்கோவிலுக்கான முதல் மரியாதை குடும்பத்தினர் முன்னிலையில்தான் நடைபெறும். அவர்கள் கைகளால்தான் வைர முடி மூலவருக்கு அணிவிக்கப்படும். இது பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் ஆகும்.
ஆனால் இந்த ஆண்டு வைரமுடி கவசத்தை கோவிலுக்கான 2-வது மரியாதை குடும்பத்தார் முன்னிலையில் மாவட்ட கருவூலத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் காரில் எடுத்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் வழக்கமாக வைரமுடியை சுமந்து செல்லும் முதல்-மரியாதை குடும்ப உறுப்பினர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக கூறி குற்றம்சாட்டி வைர முடி எடுத்து வரப்பட்ட வாகனத்தை வழிமறித்து சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மாவட்ட நிர்வாகத்தினர் சமாதானம் செய்தனர். பின்னர் ஒருவழியாக அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவர்களையும் மாவட்ட நிர்வாகத்தினர் தங்களுடன் அழைத்து வந்தனர். அதையடுத்து அவர்கள் முன்னிலையில் வைர முடி கவசம் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் முதல் மரியாதை குடும்ப உறுப்பினர்கள் வைர முடி கவசத்தை சுமந்து சென்று சாமிக்கு அணிவித்தனர். இதன் பின்னர் வைரமுடி உற்சவம் தொடங்கியது.
Related Tags :
Next Story