நின்ற லாரி மீது வேன் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
சித்ரதுர்கா அருகே நின்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு:
சுற்றுலா சென்றனர்
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் 11 பேர் ஒரு வேனில் உத்தர கன்னடா மாவட்டம் முருடேஸ்வர் மற்றும் கோகர்னா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து நேற்று அதிகாலையில் பெங்களூரு நோக்கி புறப்பட்டனர். அவர்கள் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா கொரலடக்கா அருகே பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
2 பேர் பலி
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த சுவேதா(வயது 24), ஆதித்யா தாஸ்(25) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அறிந்த இரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான சுவேதா, ஆதித்யா தாஸ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story