தட்சிண கன்னடா, உடுப்பியில் உள்ள கோவில்களில் கவர்னர் கெலாட் சாமி தரிசனம்
தட்சிண கன்னடா, உடுப்பியில் உள்ள கோவில்களில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பெங்களூரு:
கவர்னர் தாவர்சந்த் கெலாட்
கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவர் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்திற்கு வந்துள்ளார். இதற்காக நேற்று காலையில் அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு அவரை பா.ஜனதாவினர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்றார். அங்கு சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்தார்.
கோகர்ணநாதா கோவில்
அதையடுத்து அவர் குதுரோலி கோகர்ணநாதா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்து கவர்னர் வழிபட்டார். அதையடுத்து அவர் மூடபித்ரியில் உள்ள சாவிரா கம்படா பசாடி கோவிலுக்கு சென்றார்.
பின்னர் கொடியடுக்காவில் உள்ள அன்னபூர்னேஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதையடுத்து அவர் உடுப்பி மாவட்டம் கார்கலாவுக்கு சென்று அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இன்று பெங்களூரு புறப்படுகிறார்
பின்னர் இரவில் அங்கிருந்து காரில் மங்களூருவுக்கு வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அவர் மங்களூருவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story