அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நர்சிங் படிப்புக்கான இடத்தை வழங்க மறுப்பு


அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நர்சிங் படிப்புக்கான இடத்தை வழங்க மறுப்பு
x
தினத்தந்தி 15 March 2022 2:02 AM IST (Updated: 15 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நர்சிங் படிப்புக்கான இடத்தை வழங்க மறுப்பதாக தனியார் கல்லூரி மீது மாணவி புகார் அளித்துள்ளார்.

தஞ்சாவூர்:
அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நர்சிங் படிப்புக்கான இடத்தை வழங்க மறுப்பதாக தனியார் கல்லூரி மீது மாணவி புகார் அளித்துள்ளார்.
கலெக்டரிடம், மாணவி மனு
தஞ்சை மாலட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது உசேன் மகள் அல்ஸலாம்பேகம்(வயது19) என்ற மாணவி தனது தாயாருடன் வந்து கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு இட ஒதுக்கீடு
நான் பி.எஸ்சி. நர்சிங் படிக்க விண்ணப்பித்தேன். இதில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் எனக்கு தஞ்சையில் உள்ள அவர்லேடி நர்சிங் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஆணை எனக்கு கடந்த 10-ந ்தேதி மாலை கிடைத்தது. இதையடுத்து 11-ந்தேதி அந்த கல்லூரியில் சேருவதற்காக சென்றேன். ஆனால் கல்லூரி நிர்வாகம் மறுநாள்(12-ந் தேதி) வருமாறு கூறினார்கள்.
அப்போது அவர்கள், அரசு ஒதுக்கீட்டில் இடம் இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சேருங்கள். அதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினர். பின்னர் நிர்வாக ஒதுக்கீட்டிலும் இந்த ஆண்டு இடம் இல்லை. அடுத்த ஆண்டு சேருங்கள். இடம் தருகிறோம் என்று கூறி திருப்பி அனுப்பினர்.
முதல் பட்டதாரி
நான் எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான், கிராமப்புறத்தில் இருந்து இப்போதுதான் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க முதல் பட்டதாரியாக பி.எஸ்சி. நர்சிங் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பினை அந்த கல்லூரி எனக்கு கொடுக்காமல் மறுத்து விட்டது.
இது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் படிக்க முடியாமல் போய்விடுமோ? என மன வேதனையில் இருந்த நான் கடந்த 3 நாட்களாக சாப்பிடக்கூட இல்லை. எனது பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளனர். எனக்கு அந்த கல்லூரியிலோ அல்லது வேறு ஒரு கல்லூரியிலோ இடம் வழங்கி வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story