பீதரில் தற்கொலை செய்த அரசு பஸ் டிரைவர் குடும்பத்திற்கு நிவாரணம்-வேலை; பசவராஜ் பொம்மை தகவல்
பீதரில் தற்கொலை செய்து கொண்ட அரசு ஓட்டுனர் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
பெங்களூரு:
உறுதி சான்றிதழ்
கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பீதரில் அரசு ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
பீதர் மாவட்டம் பால்கி பணிமனையில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர்-ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் ஓம்கார் ரேவணப்பா(வயது42). அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தனது சாதி சான்றிதழ் செல்லுபடி குறித்த உறுதி சான்றிதழ் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
12 சாதிகள்
பழங்குடியினர் சாதி பட்டியலில் சுமார் 50 சாதிகள் உள்ளன. அதில் கோன்ட உள்பட 12 சாதிகள் தங்களின் சாதி சான்றிதழ் செல்லுபடி குறித்த உறுதி சான்றிதழை பெற வேண்டும். இந்த சாதியை சேர்ந்தவர் தான் ஓம்கார் ரேவணப்பா. அந்த சாதியை உறுதி செய்யும் அதிகாரம், மக்கள் உரிமை அமலாக்கம் என்ற அமைப்பிடம் உள்ளது.
அந்த அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சித்தராமையா
முன்னதாக சித்தராமையா பேசும்போது, ‘‘பீதரில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த ஓம்கார் ரேவணப்பா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். தனது சாதி சான்றிதழ் செல்லுபடி குறித்த உறுதி தன்மை சான்றிதழை பெற 8 ஆண்டுகள் போராடியுள்ளார்.
ஆனால் அவருக்கு இந்த அரசு உறுதி சான்றிதழை வழங்கவில்லை. இதனால் மனம் நொந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என்றார். அதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) குழு துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜசேகர் பட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்டோர் பேசினர்.
Related Tags :
Next Story