நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் சிதைந்ததால் உணவு- தண்ணீர் அருந்த முடியாமல் பசுமாடு தவிப்பு


நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் சிதைந்ததால் உணவு- தண்ணீர் அருந்த முடியாமல் பசுமாடு தவிப்பு
x
தினத்தந்தி 15 March 2022 2:16 AM IST (Updated: 15 March 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் சிதைந்ததால் உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாமல் பசு மாடு தவித்து வருகிறது. இதேபோல் தனது தாயிடம் பால் குடிக்க முடியாமல் அதன் கன்றுக்குட்டி ஏக்கத்துடன் சுற்றி வருகிறது.

நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் சிதைந்ததால் உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாமல் பசு மாடு தவித்து வருகிறது. இதேபோல் தனது தாயிடம் பால் குடிக்க முடியாமல் அதன் கன்றுக்குட்டி ஏக்கத்துடன் சுற்றி வருகிறது. 
உதவி விரிவுரையாளர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. அவருடைய மகன் மதன்குமார் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ஈரோடு மாவட்டம்  டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி உதவி பேராசிரியராக  பணியாற்றி வந்தார். சமீப காலமாக இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய உதவி ேபராசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டார்.
இதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். 
நாட்டு வெடிகுண்டை...
இந்தநிலையில் அவர் வளர்த்து வரும் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 18 நாட்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.
இந்தநிலையில், மதன்குமார்  வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்து உள்ளது. இதில் அதன் வாய் சிதைந்தது.
வெடிச்சத்தம் கேட்டதும் மதன்குமார் ஓடிச்சென்று பார்த்தார். அப்போது அவருடைய பசு மாடு வாயில் இருந்து ரத்தம் சொட்டியபடி கத்திக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மாட்டின் தாடை மற்றும் நாக்கு சிதைந்து தொங்கி கொண்டிருந்ததை கண்டு கண் கலங்கினார். 
பால் குடிக்க முடியாத கன்றுக்குட்டி
இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டை தயாரித்து வனப்பகுதியில் வைத்த சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரன் (37), பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ் (59) ஆகியோரை கைது செய்தனர். 
இந்தநிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய்ப்பகுதி சிதைந்த  அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்களால் அந்த பசு மாட்டுக்கு குளுக்கோஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. பிறந்த 18 நாட்களே ஆன கன்றுக்குட்டி தாயிடம் சென்று பால் குடிக்க முயன்றது. ஆனால் பால் இல்லாததால் அந்த கன்றுக்குட்டி தன்னுடைய தாயையே சுற்றி சுற்றி வருகிறது. மேலும் தன்னுடைய தாயின் முகத்தோடு முகம் வைத்து முகர்ந்து செல்கிறது. இது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. மேலும் இந்த பாச போராட்டத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு மனம் உருகி சென்றனர். எனினும் மதன்குமார், அந்த கன்றுக்குட்டிக்கு புட்டிப்பால் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் படுகாயம் அடைந்த பசு மாட்டை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு பசு மாட்டை சிகிச்சைக்காக மதன்குமார் கொண்டு சென்று உள்ளார். 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பசு மாட்டுக்கு நேர்ந்த இந்த விபரீதம் இனி நடக்காமல் இருக்க வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இதுபோன்ற இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை வேண்டும்,’ என்றனர்.

Related Tags :
Next Story