‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 March 2022 3:08 AM IST (Updated: 15 March 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அதிகரிக்கும் குரங்குகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி நகரில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்தும், மலைகளில் இருந்தும் குரங்குகள் கூட்டம், கூட்டமாக நகருக்குள் வருகின்றன. இவை கேபிள் வயர்களில் தொங்கி அதை சேதப்படுத்துகின்றன. மேலும் வீடுகளின் மேல்புறமாக வைக்கப்பட்டுள்ள ஆண்டனாக்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. அதேபோல் மின்சார வயர்களில் ஆபத்தான முறையில் தொங்கி விளையாடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அவற்றை வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகர், கிருஷ்ணகிரி.

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் வழியாக தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரக்கூடிய இடத்தில் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அதேபோல பஸ் நிலைய முன்புறமும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேணு, கிருஷ்ணகிரி.

தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு

நாமக்கல் நகராட்சி 14-வது வார்டு என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த தெரு முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், என்.கொசவம்பட்டி, நாமக்கல்

மண் சாலையாக மாறிய தார்சாலை 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியில் இருந்து தாதம்பட்டி வரை செல்லும் தார்சாலை தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தார்சாலையாக இருந்தது தற்போது மண் சாலையாக மாறி விட்டது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த சாலை வழியாக கல்குவாரி லாரிகள், கோழி பண்ணை லாரிகள் செல்லும்போது புழுதி கிளம்பி அந்த வழியாக செல்வோர் அவதியடைகின்றனர். எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராசு, வடுகப்பட்டி. நாமக்கல்

மின்தடையால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 15 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வழியாக கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், பெண்கள், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதனை கவனத்திற்கு எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதம், வேப்பனப்பள்ளி. 

குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே மயானம் உள்ளது. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மயான வளாகத்தில் பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்த குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் கிளம்பும் கரும்புகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவி வருகிறது. இவ்வாறு குப்பைகள் எரிக்கப்படும் நேரங்களில் தர்மபுரி- சேலம் சாலையில் வாகனங்களில் செல்வோர் புகை மூட்டத்தில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் வகையிலும், சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் குப்பைகள், கழிவு பொருட்களை எரிப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, தர்மபுரி.

புழுதி பறக்கும் சாலை

சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் அந்த சாலை மண்சாலை போன்று காணப்படுகிறது. எனவே சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. ஆஸ்பத்திரி முன்பு பஸ்சுக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் இந்த சாலையால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலை இந்த அளவுக்கு மோசமாக காட்சி அளிப்பதால் கலெக்டர் நேரடியாக இதில் தலையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்துரு, சேலம்.

Next Story