கோவில் வரவேற்பு வளைவு அகற்றம் பொதுமக்கள் போராட்டம்
கருங்கல் அருகே அமைக்கப்பட்ட கோவில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே அமைக்கப்பட்ட கோவில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கருங்கல் அருகே திப்பிரமலைப்பகுதியில் உள்ள பத்ரேஸ்வரிஅம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் இரும்பால் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. அதை அகற்ற வேண்டும் என ஒரு சாரார் தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கருங்கல் போலீசார் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் வந்து, அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர்.
இதனால் குளச்சல் சரக துணை சூப்பிரண்டு தங்க ராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களிடம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மற்ற இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளையும் அகற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்கள். அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
---
Related Tags :
Next Story