சேலத்தில் ஆன்லைன் இடமாறுதல் கலந்தாய்வு காலதாமதம்-பட்டதாரி ஆசிரியர்கள் அவதி
சேலத்தில் ஆன்லைன் இடமாறுதல் கலந்தாய்வு காலதாமதமானதால் பட்டதாரி ஆசிரியர்கள் அவதியடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காத்திருந்தனர். பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் வந்து ஆன்லைன் கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக மதியம் 1 மணி வரையிலும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து 2 மணிக்கு பின்பு சர்வர் பிரச்சினை சரி செய்யப்பட்டதால் 5 மணி நேரம் காலதாமதமாக ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி இரவு வரை நீடித்தது. அதன்பிறகு தங்களுக்கு விருப்பமான இடங்களை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். பின்னர் அவர்களுக்கு பணிமாறுதலுக்கான உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கினர்.
Related Tags :
Next Story