நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா?-எச்.ராஜா பதில்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து எச்.ராஜா பதில் அளித்துள்ளார்.
தலைவாசல்:
சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் வரும். ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் வராது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இனி இந்தியாவை ஆள முடியாது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சி ஒரு ஊழல் ஆட்சி என்பது மறுக்க முடியாத உண்மை. பிரதமர் மோடி சிறந்த முறையில் நல்லாட்சி செய்து வருகிறார். உலகமே அவரை திரும்பி பார்க்கிறது. மக்கள் தொடர்ந்து நல்லாதரவு தந்து வருகிறார்கள் பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த 4 மாநில வெற்றியே சாட்சியாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் இது தொடர்பாக நான் எதுவும் பதில் அளிக்க முடியாது. இது அகில இந்திய தலைவர்கள் பேசி முடிவெடுத்து அறிவிக்கின்ற விஷயம் என்றார்.
Related Tags :
Next Story