கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 15 March 2022 7:27 PM IST (Updated: 15 March 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 2020-2021-ல் பிரிமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு விவசாய மாவட்ட செயலாளர் நல்லையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகு முத்து பாண்டியன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர்கள் பாலமுருகன், அழகு, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர்கள் லெனின் குமார், கிருஷ்ண மூர்த்தி, தாலுகா தலைவர்கள் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், தாலுகா செயலாளர் வேலாயுதம், பால் பண்ணை தலைவர் ஜெயராமன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தியவர்களிடம் வேளாண் துணை இயக்குனர் நாச்சியார், வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) மார்டின் ராணி, உதவி கலெக்டர் சங்கரநாராயணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினா்.
பேச்சுவார்த்தையில், 2020-21-ம் ஆண்டு ராபி பருவத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களுக்கு, பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வருகிற 31-ந்தேதிக்குள் பெற்று, வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story