எட்டயபுரத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு


எட்டயபுரத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு
x

எட்டயபுரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

எட்டயபுரம்:
எட்டயபுரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
முந்திச்சென்ற பஸ்சால் பிரச்சினை
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 10 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. அங்கிருந்து அந்த பஸ்சுக்கு பின்னால், 10.05 மணிக்கு புறப்பட்ட மற்றொரு தனியார் பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்திக்கொண்டு சென்றது. அந்த பஸ் எட்டயபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து வந்த, முதலில் புறப்பட்ட தனியார் பஸ்சின் டிரைவரை,  பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அந்த தனியார் பஸ்சை மறித்து நிறுத்தினார். 
ஊழியர்கள் மோதல்
இதை தொடர்ந்து 2 பஸ்களின் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது முற்றியதில் இருதரப்பினரும். ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், அந்த 2 பஸ்களில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு விட்டு  ஓட்டுனர்கள், நடத்துனர்களை எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் போலீஸ் நிலையத்தில் இரு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
போலீசார் கண்டிப்பு
இதில், கோவில்பட்டியில் காலை 10 மணிக்கு புறப்பட்ட பஸ் எட்டயபுரம் பஸ் நிலையத்துக்கு 10.35 மணிக்கு வந்தடைய வேண்டும். அதைவிடுத்து, பின்னால் புறப்பட்ட பஸ் முந்தி வந்து பயணிகளை ஏற்றியது தவறு என சுட்டிக்காட்டி, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரை போலீசார் கண்டித்தனர். இனிமேல்,  அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை சரியாக இயக்க வேண்டும். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டு, வேறு பிரச்சினைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பயணிகள் கோரிக்கை
பின்னர் அந்த 2 தனியார் பஸ்களும் கால் மணி நேரம் தாமதமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற பிரச்சினை இந்த பஸ்நிலையத்தில் அடிக்கடி நடப்பதாகவும், இனிமேல் இப்பிரச்சினை நடக்காதவாறு போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story