கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் கார் மீது குதித்த காட்டெருமை கண்ணாடி உடைந்து சேதம்
கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் கார் மீது காட்டெருமை குதித்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் தீ காரணமாக அவை இடம்பெயர்ந்து வருகின்றன. நேற்று பிற்பகலில் கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சிலர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த கார் கொடைக்கானலை அடுத்த பெருமாள்மலை அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டெருமை திடீரென்று மேலே இருந்து மலைப்பாதையில் நின்ற காரின் மீது தாவி குதித்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. அத்துடன் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதற்கிடையே காரின் மீது விழுந்த காட்டெருமை சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து தப்பியோடிவிட்டது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். அதில், காட்டெருமை குதித்ததால் தங்களது காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனச்சரகர் சிவகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story