மா மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்- தோட்டக்கலைத்துறை விளக்கம்


மா மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்- தோட்டக்கலைத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 15 March 2022 8:23 PM IST (Updated: 15 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

மா மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மா விவசாயிகள் 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் இந்த ஆண்டு பெய்த மழையினால் மா மரங்களில் அதிகபடியான பூக்கள் காணப்படுகின்றன. இந்த சமயத்தில் மா விவசாயிகள், பூவை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த முதல் தெளிப்பாக இமிடோகுளோர்ட் 0.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் தெளிக்க வேண்டும். அல்லது தையோமித்தாக்சைம் 0.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பினைப்புழு, மா இலை புழு மற்றும் காவன புழுக்கள் பிஞ்சு காய்களை கடித்து தின்று சேதப்படுத்துகின்றது. இதனை கட்டுப்படுத்த அசாராக்டின் 1,500 பி.பி.எம். 4 மில்லியை 1 லிட்டர் தண்ணீர் அல்லது டைமிதோயேட் 2 மில்லியை 1 லிட்டர் தண்ணீர் அல்லது எமாமேக்டான் பென்சாலேட் 0.4 கிராமை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து 2-வது தெளிப்பாக தெளிக்க வேண்டும். பழ ஈக்கள் மா பழங்களை தாக்கி அதிகம் சேதம் ஏற்படுத்தும். இந்த பழ ஈக்கள் தாக்கினால் பழங்கள் விற்பனைக்கு போகாது. பழ ஈக்களை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 8 பழ ஈ பொறி (மீதைல் யூஜினால் பொறி) சம இடைவெளியில் மா மரத்தில் தொங்க விட வேண்டும்.
அதிக மகசூல் 
மேலும் சாம்பல் நோய், பழ அழுகல் நோய், நுனி தண்டு அழுகல் சேர்ந்து, இலைகள், கிளை தண்டின் நுனி, பூக்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றினை தாக்கும். நோய் தாக்குதல் தீவிரமாகும் போது, பூக்கள் தாக்கப்பட்டு கருகி கீழே கொட்டிவிடும். இந்த நோய் காய்கள் உண்டாவதை தடுப்பதுடன், உண்டான பிஞ்சுகளையும் தாக்குவதால் கருகி கீழே விழுந்துவிடும். இவற்றை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெற்று பூச்சிக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி மா விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story