ஓசூரில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: புதிய திட்டங்களை மிக குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது-அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
புதிய திட்டங்களை மிக குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது என்று ஓசூரில் நடந்த பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
ஓசூர்:
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கும் விழா ஓசூரில் இன்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி, துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் திட்ட விளக்க உரையாற்றினார். பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி வரவேற்றார். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 689 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-
சிறந்த வேலைவாய்ப்பு தொழில்
பட்டு வளர்ப்பு தொழிலானது தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இந்த தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்களுக்கும், குறிப்பாக சுயதொழில் செய்யும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பட்டு விளங்குகிறது.
இந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தொடர் வருமானமும் கிடைத்து வருகிறது. நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டில் பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு தொழில் முனைவோர்களின் நலனுக்காக 9 புதிய திட்டங்கள் ரூ.18.68 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறுகிய காலத்தில் நிறைவேற்றம்
வெண் பட்டுப்புழு வளர்ப்பில், பட்டுப்புழுவின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க நவீன தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தி.மு.க. அரசு பதவியேற்றது முதல், அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றி வருகிறது.
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி தமிழகத்தை பட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ செய்யும் வகையில் பட்டு விவசாயிகள், தொழில் முனைவோர்கள், நூற்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
விழாவில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, எம்.எல்.ஏ.க்கள் தளி ராமச்சந்திரன், பர்கூர் மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story